சுவிட்சர்லாந்தில் ஃபிரெஞ்சு மொழி பேசும் மாநிலங்களில் ஒன்றான நியுச்சேட்டலில் ஆங்கிலம் பேசுவதையும் வணிக மையங்களில் பயன்படுத்துவதையும் தவிர்க்கும்படி புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.கடைகளில் "sales" என்ற ஆங்கிலச் சொல்லை நீக்கி விட்டு அதற்கு இணையான 'Soldes' என்ற பிரெஞ்சு சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு வணிகர்களிடம் அறிவுறுத்தியது.
இதற்குக் காரணம் "Sales" என்ற சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் "அழுக்கு" என்ற பொருள் இருப்பதால் இதைப் பயன்படுத்தக்கூடாது. நமது கடைகளும் வாணிபமும் அழுக்கில்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று வணிக ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பியர் போன்ஹாட் தெரிவித்தார்.
அரசும், Sale என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துவது பிரெஞ்சு மொழிக்கு இழுக்காகும். அதைத் தடை செய்வதே சரி என்று கூறியுள்ளது. Sale என்ற சொல்லை சில்லறை வியாபாரிகள் குறிப்பாக, ஜேர்மனி பேசும் சுவிட்சர்லாந்து பகுதியில் இருப்பவர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஜுரிச் நகரில் தான் தேசிய விளம்பரங்கள் முடிவு செய்யப்படுகின்றன. அங்கு ஆங்கிலத்தை ஆதரிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகளாக ஜேர்மனி பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகள் இருப்பதால் இந்த மூன்றிலும் மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக விளம்பரங்களை ஆங்கிலத்தில் வெளியிடுவது எளிது என்பது தான்.
ஜுரிச், ஆங்கில மொழியைப் பொதுமொழியாகப் பயன்படுத்துவதை நியுச்சேட்டல் ஆதரிக்கவில்லை. "மாறாக தாங்கள் பிரெஞ்சு மொழிக்குத் தரும் முக்கியத்துவத்தைப் பிற பிரெஞ்சு மொழி பேசும் மாநிலங்களும் ஆதரிக்க வேண்டும் என்று டிடியர் பெர்பெரா தெரிவித்துள்ளார். இவர் நியுச்சேட்டலின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிரெஞ்சுமொழிப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவரும் ஆவார்.
சுவிஸ் விளம்பரத்துறையின் Publicitie Suisse தலைவரான ஹெர்வெ தேவன்தெரி, பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரெஞ்சு மொழி மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று வற்புறுத்துவது சற்று அதிகப்படியாகத்தான் தோன்றுகிறது.
அரசு இதுதொடர்பாக சட்டம் இயற்ற இயலாது. கடைக்காரர்களும் வாடிக்கையாளரும் "Sale" என்ற சொல் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். மொழிவாதிகள் தான் பிரெஞ்சு மையமிட்ட மொழிவழக்கை (Franglais) ஆதிக்கமொழி ஆக்கத் துடிக்கின்றனர் என்றார்.

|